பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நேற்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து பேசினார்
பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை
Published on

சென்னை,

தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக நியமனம் செய்யப்பட்டார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி உயர்கல்வி நிறுவனங்கள் சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நேரடியாக நடந்தது. இந்த நிலையில் 2-வது முறையாக தமிழகத்தில் உள்ள மத்திய-மாநில அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

எதிர்கால நடவடிக்கைகள்

இந்த ஆலோசனையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தங்களுடைய கல்வி நிறுவனங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து கூறினர். அப்போது கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் உடன் இருந்தார்.

பின்னர், சில அறிவுரைகளை கூறிய கவர்னர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், தற்போதை செயல்பாடுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். மேலும் நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் தொடர்பாக பல்கலைக்கழகங்கள் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியதோடு, வரக்கூடிய நாட்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தலைவர்களின் பெயரில் இருக்கைகள்

நமது கடந்த காலத்தை பற்றி இளைய தலைமுறையினரிடம் பெருமிதம் கொள்ளும் வகையிலும், நமது சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் மிகுந்த மரியாதை அளிக்கும் வகையிலும் கற்பனைத்திறனுடன் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும்.

சுப்பிரமணிய பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற நமது தேசத்தின் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்களின் பெயர்களில் இருக்கைகளை அமைத்து, அவர்களின் நோக்கங்களையும், மகத்தான இந்தியாவை கட்டமைக்கும் நோக்கங்களையும் நிறைவேற்ற வேண்டும்.

2047-ம் ஆண்டில் இந்தியாவின் வரையறைகளை கோடிட்டு காட்டும் ஆவணங்களை தயாரிப்பதற்காக அறிஞர்களின் குழுக்களை பல்கலைக்கழகங்களில் அமைக்க வேண்டும். இந்தியாவுக்கு உரிய இடத்தை பெறுவதற்கான மூலோபாய ஆவணங்களில் அவர்கள் பணியாற்ற துணைவேந்தர்கள் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவின் பொருளாதார நிலை

ஆலோசனையின் நிறைவில், காலனி ஆதிக்கத்துக்கு முன், இந்திய நாடு எவ்வளவு செழிப்பாக இருந்தது என்பதையும், அதை ஆங்கிலேயர்கள் எவ்வாறு சுரண்டினார்கள் என்பதையும் துணைவேந்தர்களுடன் விவாதித்த கவர்னர் ரவி, கி.பி., 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார நிலை பற்றியும், அதன் மீதான அந்நியர்களின் சுரண்டல்கள் பற்றியுமான ஆய்வுகளை முன்னெடுக்குமாறும் துணைவேந்தர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com