கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு

கடந்த 2 நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க.அமைச்சர்கள் மீது ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் பட்டியலை கொடுத்திருந்தார்.
சென்னை,
அரசியல் பரபரப்புக்கு இடையே கவர்னர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் பீகார் மாநிலம் பாட்னா சென்றுள்ளார். பாட்னா ஐ.ஐ.டி.யில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் அவர் இன்னும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இன்றும், நாளையும் பாட்னாவில் தங்கி இருக்கும் கவர்னர் ஆர்.என். ரவி நாளை மறுநாள் (11-ந்தேதி) இரவு அங்கிருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். டெல்லியில் 2 நாட்கள் தங்கி இருக்கும் அவர் வருகிற 14-ந்தேதிதான் சென்னை திரும்புகிறார். டெல்லியில் அவரது நிகழ்ச்சிகள் ஏதும் வெளியிடப்படவில்லை. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க. அமைச்சர்கள் மீது ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் பட்டியலை கொடுத்திருந்தார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 12-ந்தேதி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து, தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றி விவாதிப்பார் என தெரிகிறது. அதன்பிறகு கவர்னர் ஆர். என்.ரவி 14-ந்தேதி சென்னை திரும்புகிறார்.






