ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கவர்னர், மாநில அரசின் தீர்மானங்களை பரிசீலிக்காமலேயே கிடப்பில் போட்டு வைத்திருப்பது 7.5 கோடி தமிழர்களுக்கு செய்கின்ற துரோகம் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் கிடைக்கும் வரி வருவாய்க்காகவும், இதர வருவாய்க்காகவும் அதனை தடை செய்ய மத்திய பாஜக அரசு மறுத்து வருகிறது. ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு இயற்றிய அவசர தடை சட்டத்திற்கு அனுமதி தராமல் மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த நிலையில் இளைஞர்கள், இல்லத்தரசிகள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் தொடங்கி தினக்கூலி தொழிலாளர்கள் வரை அவர்களின் மனதில் பணத்தாசையை தூண்டிவிட்டு, கடைசியில் அவர்களை கடனாளியாக்கி உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் கோவை, உப்பிலிபாளையத்திலும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலும் என இரண்டு இளைஞர்களின் உயிர் பலி கொடுக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது. 29 வயது மென்பொறியாளரான சங்கர் மற்றும் 21 வயதான வினோத் குமார் என்கிற பொறியியல் மாணவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியாகியதால் வேறு வழியின்றி தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இளம் மென்பொறியாளரான சங்கர் மற்றும் பொறியியல் மாணவர் வினோத் குமார் ஆகியோர் மட்டுமின்றி எண்ணற்ற இளைஞர்கள், இல்லத்தரசிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் மாநில அரசு அவசர தடை சட்டம் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் கூட அந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத கவர்னர் ஆர்.என்.ரவி இரு இளைஞர்களின் துர் மரணத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும்.

அத்துடன் மாநில அரசுக்கு எதிரான நிலையை கடைபிடித்து, மக்கள் விரோத செயலை கடைபிடித்து, மத்திய அரசின் கைப்பாவையாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் தன் போக்கினை மாற்றிக் கொண்டு தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மக்கள் நலனுக்கான பொறுப்பில் இருந்து கொண்டு அதனை தட்டிக் கழித்து கொண்டிருப்பதும், சட்டமன்றத்தில் இயற்றப்பட்டும் மாநில அரசின் தீர்மானங்களை பரிசீலிக்காமலேயே கிடப்பில் போட்டு வைத்திருப்பதும் 7.5 கோடி தமிழர்களுக்கு செய்கின்ற துரோகமாகும் என்பதையும் கவனத்தில் கொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com