உலக தலைமை ஏற்கும் நாடாக பாரதத்தை உருவாக்க வேண்டும் கவர்னர் குடியரசு தின வாழ்த்து செய்தி

சுதந்திர நூற்றாண்டு விழாவை கொண்டாடும்போது, உலக தலைமை ஏற்கும் நாடாக பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று தனது குடியரசு தின வாழ்த்து செய்தியில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
உலக தலைமை ஏற்கும் நாடாக பாரதத்தை உருவாக்க வேண்டும் கவர்னர் குடியரசு தின வாழ்த்து செய்தி
Published on

சென்னை,

மங்களகரமான நமது 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் நிறைவான நல்வாழ்த்துகளையும், என் இதயம் கனிந்த நல்லாசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுதந்திரத்தின் அமுத பெருவிழாவையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்த நாள் விழாவையும் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும், தேசிய பெருமிதத்தோடும் கொண்டாடி வருகிறோம். இந்த நன்னாளில், தேச விடுதலை வீரர்களை, அவர்களின் தியாகங்களுக்காகவும், இன்னல்களுக்காகவும் நினைவு கூர்கிறோம்.

கவுரவம்

வீரமங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், முத்துராமலிங்கத் தேவர், ஜானகி தேவர் உள்ளிட்ட பலரையும் எண்ணி பார்த்து, நம்முடைய நன்றி அறிதலை அவர்களுக்கு உரித்தாக்குகிறோம்.

தமிழகத்தில் இருந்து பற்பல வீரர்களும், தியாகிகளும் தேச விடுதலை இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பலர், காலனி ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக நேதாஜியின் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியுள்ளனர்.தம்முடைய வியர்வை-ரத்தம்-தியாகம் ஆகியவற்றால் நமக்கு சுதந்திர அமுதத்தை அளித்த வீரர்களையும், தியாகிகளையும் அடையாளம் கண்டு கவுரவிக்க வேண்டும்.

கொரோனா 3-வது அலை

இத்தனை நாட்கள், அவர்களின் பங்களிப்பை மறந்து, அவர்களை கவனிக்காமல் இருந்ததற்காக மன்னிப்பு கோர வேண்டும்.

கொரோனா 3-வது அலையில் இப்போது நம் நாடு இருக்கிறது. ஆஸ்பத்திரி மற்றும் நலவாழ்வு சேவைகளிலோ, உள்கட்டுமானங்களிலோ, மருந்துகளிலோ நமக்கு இப்போது பற்றாக்குறை இல்லை. தடுப்பூசியை பொறுத்தவரை, உலக சாதனையை ஏற்படுத்திவிட்டோம். கொரோனா மற்றும் புதிய வகைகளின் இந்த புதிய அலையை, கூடுதல் நம்பிக்கையோடும், முன்னேற்பாடுகளோடும் நம்மால் கையாள முடிகிறது.

துடிப்பும் தொலைநோக்கும் கொண்ட தலைமையின்கீழ் நம்முடைய நாடு இப்போது முழுமையான புத்தாக்கம் காண்கிறது. 2047-ல், நம்முடைய சுதந்திர நூற்றாண்டு விழாவை கொண்டாடுகையில், உலக தலைமையேற்கும் நாடாக பாரதத்தை உருவாக்கி விட வேண்டும் என்னும் உறுதியின் உத்வேகம் ஊற்றெடுக்கிறது.

எண்ணிக்கை உயர்வு

நீட்' தேர்வுக்கு முன்னதான காலத்தில், அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் காரணமாக, இத்தகைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனினும், அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தவேண்டியது நம்முடைய அவசர தேவை.

உலகின் மிக தொன்மையான மொழி தமிழேயாகும். தமிழ்மொழியின் பெருமையை நாட்டின் பிற பகுதிகளில் அறிய செய்கிற அதே நேரத்தில், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களை போல், நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளை பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை.

நாட்டை செம்மைப்படுத்தும்; ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கு வழியமைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com