பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு தைரியமாக செயல்படுங்கள் துணைவேந்தர்கள் கூட்டத்தில் கவர்னர் பேச்சு

தமிழக பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு தைரியமாக செயல்படுங்கள் என்று துணைவேந்தர்கள் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு தைரியமாக செயல்படுங்கள் துணைவேந்தர்கள் கூட்டத்தில் கவர்னர் பேச்சு
Published on

சென்னை,

தமிழக கவர்னரான பன்வாரிலால் புரோகித் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை முதன் முறையாக நேற்று கூட்டினார்.

கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் முன்னிலை வகித்தனர்.

நிதிநிலை எப்படி?

கூட்டத்தில், பல்கலைக்கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவது, வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடந்தது. பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து துணைவேந்தர்கள் ஒவ்வொருவராக பேச கவர்னர் அழைத்தார்.

அதன்படி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் புதிய பட்டப்படிப்புகள் தொடங்கியிருப்பது, மாணவர்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தேர்வு முறைகள் குறித்து பேசினார்கள்.

தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் நிதிநிலை எப்படி இருக்கிறது? எவ்வளவு பணியிடம் காலியாக இருக்கிறது? பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைப்படி விரிவுரையாளர்கள் இருக்கிறார்களா? என்பது உள்பட பல விவரங்களை துணைவேந்தர்களிடம் இருந்து கவர்னர் கேட்டறிந்தார்.

நேர்மையாக...

பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்வித்தரத்தை தேசிய அளவில் தரம் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு தேவைகள் என்ன? பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்துக்கு தடைகளாக இருப்பது என்ன? என்பதை தெரிவிக்கலாம்.

காலி பணியிடங்களை நிரப்புவதன் மூலம் பல்கலைக்கழகத்தை ஆரோக்கியமாக நடத்தி செல்ல முடியும். எனவே காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைவேந்தர்கள் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக தைரியமாக செயல்படவேண்டும். நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை. உயர்கல்வியில் தமிழகம் முதல் இடத்தில் இருக்க வேண்டும். நாம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உறுதி அளித்தனர்

கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் பேசுகையில், எந்த வகையான யுக்திகளை துணைவேந்தர்கள் பயன்படுத்தினால் பல்கலைக்கழகத்தின் திறன், செயல்பாடு மேம்பாடு அடையும். மற்ற பல்கலைக்கழகங்களுடன் எந்த வகையில் இணைப்பு வைத்து கொள்ள வேண்டும் என்பன குறித்து பல அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து கவர்னரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு திறம்பட பணியாற்றுவோம் என்று அனைத்து துணைவேந்தர்கள், பதிவாளர்கள் உறுதி அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com