12 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்

விராலிமலை ஒன்றியத்தில் விளாப்பட்டி, நீர்பழனி உள்ளிட்ட 12 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்
Published on

நேரடி கொள்முதல் நிலையம்

விராலிமலை ஒன்றியம், விளாப்பட்டி, நீர்பழனி, மண்டையூர், மதயானைப்பட்டி, மேலபச்சைகுடி, குமாரமங்கலம், தொண்டைமான்நல்லூர், மூளிப்பட்டி, தென்னதிரையன்பட்டி, பாலாண்டம்பட்டி, ஆலங்குடி, சூரியூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன. அதில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அதிக லாபத்திற்கு விற்பனை செய்து பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது கோடை குறுவை நெல் சாகுபடி அறுவடையானது கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை தங்களது பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்த இடங்களில் குவியல் குவியலாக குவித்து வைத்து அரசின் நெல் கொள்முதலுக்காக காத்துக் கொண்டு உள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை

விளாப்பட்டியில் அவ்வாறு குவித்து வைத்துள்ள நெல்மணி குவியல்கள் கடந்த வாரம் பெய்த பெருமழையில் நனைந்து அதிக அளவில் சேதமடைந்தது. இதனால் விரக்தியடைந்து அங்கு நெல்மணிகளை குவித்து வைத்திருந்த சில விவசாயிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை தனியார் நெல் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

எனவே விராலிமலை ஒன்றியத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் விளாப்பட்டி, நீர்பழனி, மண்டையூர் உள்ளிட்ட 12 ஊர்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com