ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்துவதாகக் கூறி அரசு ஏமாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பத்தாண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். ஏற்கனவே நடந்த போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்களை கைது செய்தும், எண்ணற்ற அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டும் தமிழக அரசு கொடுமைப்படுத்தியது. மேலும் பள்ளி மேலாண்மைக் கூட்டம் நடத்துதல் போன்ற சில கோரிக்கைகள் அரைகுறையாக ஏற்கப்பட்டுள்ளன.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; உயர்கல்வித் தகுதிக்கு ஊக்கத்தொகை; உயர்கல்வி படித்தவர்களுக்கு பதவி உயர்வு; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு; பதவி உயர்வு வாய்ப்புகளைப் பறிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூட தமிழக அரசு முன்வரவில்லை. மத்திய அரசே புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், தமிழக அரசோ பழைய ஓய்வூதியக் கோரிக்கையை பரிசீலிக்கக்கூட முன்வரவில்லை. ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் தமிழக அரசு எந்த அளவுக்கு கிள்ளுக்கீரையாக மதிக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு ஆகும்.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவதால்தான் டிட்டோஜாக் அமைப்பினர் வேறு வழியின்றி இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், 29-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் நடத்த முடிவு செய்திருக்கின்றனர். எதிர்காலத் தலைமுறையினரை அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான். அதிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இதில் சிறப்புப் பங்கு உண்டு.

இத்தகைய பெருமை கொண்ட ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும். எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் அவர்களின் அடுத்தக்கட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com