இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

பெரியகுளம் அருகே விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Published on

தொழிலாளி பலி

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவர் தேனியில் உள்ள தனியார் பருப்பு மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு செந்தில்குமார் வேலைக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் திடீரென்று பஸ்சை டிரைவர் பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி செந்தில்குமார் பஸ் படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார்.

ரூ.4 லட்சம் இழப்பீடு

இதனைத் தொடர்ந்து அவரது தாய் சசிகலா கடந்த 2020-ம் ஆண்டு பெரியகுளம் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் இழப்பீடு கேட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த 2022-ம் ஆண்டு செந்தில்குமார் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்தை போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் இழப்பீடு தொகையை போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதையடுத்து கோர்ட்டில் சசிகலா நிறவேற்றுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அரசு பஸ் ஜப்தி

அந்த மனுவை விசாரித்து, இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று பெரியகுளம் பஸ்நிலையத்தில் திருச்சிக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் ரமேஷ் ஜப்தி செய்தார். பின்னர் அந்த பஸ் கோர்ட்டு வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com