பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

பார்வை மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்கு பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுத்தும் கூட கடந்த அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போல, தற்போதைய தி.மு.க. அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவதுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உரிமை கேட்டுப் போராடிய பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது சிறிதும் மனச்சான்று இன்றி காவல் துறையை ஏவி, தாக்குதல் நடத்தி தி.மு.க. அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும்.

கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என்பது மாற்றுத்திறனாளி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக..,

அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 1% உட்பட) மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி பதவி உயர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆராய்ச்சி படிப்புவரை கல்வி மற்றும் தேர்வு கட்டணத்திலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.

பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.

இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.

என்பது உள்ளிட்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தந்து, அனைவரையும் போலவே பார்வை மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com