பட்டதாரி பெண் தற்கொலை செய்த விவகாரம்: வருவாய் ஆய்வாளர் அதிரடி கைது - வெளியான பரபரப்பு தகவல்கள்


பட்டதாரி பெண் தற்கொலை செய்த விவகாரம்: வருவாய் ஆய்வாளர் அதிரடி கைது - வெளியான பரபரப்பு தகவல்கள்
x

பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளையைச் சேர்ந்தவர் அஜிகுமார். இவருடைய மனைவி ரமணி (வயது 41). பி.எஸ்.சி., பி.எட். படித்த இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். அஜிகுமார் குலசேகரம் சந்தை சந்திப்பில் நகைக்கடை நடத்தி வந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவினால் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து ரமணி வீட்டின் அருகில் பேன்சி பொருட்களை விற்பனை செய்யும் சிறிய கடை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் ரமணி நேற்று முன்தினம் காலையில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த குலசேகரம் போலீசார், ரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரமணி சாவதற்கு முன்பு எழுதி வைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் ‘பகீர்' தகவல்கள் எழுதப்பட்டிருந்தது. அதாவது, ‘கணவர் இறந்த பிறகு, அரசு வேலை கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மனு கொடுத்தேன். அப்போது அந்த மனுவில் இருந்த எனது செல்போன் எண்ணை எடுத்து அங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் வெள்ளிச்சந்தை புதுமடத்தை சேர்ந்த வேல்முருகன் (37) என்பவர் என்னிடம் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுத்தார். ஒரு கட்டத்தில், தனக்கு திருமணமாகி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினார்.

இதனை நான் கண்மூடித்தனமாக நம்பினேன். இந்த நம்பிக்கையால், அவர் என்னிடம் கேட்ட நகை மற்றும் பணத்தையும் கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் கடந்த மே மாதம் வேறொரு பெண்ணை மணம்முடித்தார். இதுபற்றி கேட்டதால் அவர் மற்றும் அவருடைய உறவினர்கள் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் தற்கொலை முடிவை எடுக்கிறேன்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ரமணியின் தந்தை ஜார்ஜ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் ரமணியின் சாவுக்கு வேல்முருகன் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வேல்முருகன் உள்பட 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் வழக்குப்பதிவு செய்தார்.

இந்தநிலையில் ரமணியின் சாவுக்கு காரணமான வேல் முருகனை கைது செய்யாவிட்டால் பிணத்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் கூறி வந்தனர். இதற்கிடையே வேல்முருகனை போலீசார் நேற்று முன்தினம் இரவு பிடித்து குலசேகரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் ரமணியிடம் பழகியதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் நேற்று மாலையில் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இந்தநிலையில் நேற்று பிற்பகலில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரமணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே ரமணி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதியதாக கூறப்படும் 6 பக்க உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி இருந்தனர். அந்த கடிதம் தொடர்பாக போலீசாருக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதனால் அந்த கடிதம் தடய அறிவியல் துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story