பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை ரத்து செய்யவேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை ரத்து செய்யவேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

அரசு பள்ளிகளில் 3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதமே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்பின் 7 மாதங்கள் தாமதமாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிரப்பப்படவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 2,222 ஆக குறைந்துவிட்டது.

அறிவிக்கை வெளியிட 7 மாதங்கள் தாமதமாகியுள்ள நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, காலியிடங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது வியப்பளிக்கிறது. அனைத்து காலியிடங்களையும் நிரப்பி அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், அக்கறையும் அரசுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

அரசாணை எண் 149

2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அப்போது போட்டித்தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், 2018-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை அப்போதைய அரசு திணித்தது. அதற்கு பா.ம.க.வுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் போட்டித்தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்த வலியுறுத்தி, தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், போட்டித்தேர்வுகளை ரத்துசெய்ய முடியாது என்று அரசு அறிவித்திருக்கிறது.

போட்டித் தேர்வு ரத்து

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஒட்டுமொத்த தமிழகமும் என்னென்ன காரணங்களுக்காக எதிர்க்கிறதோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் போட்டித் தேர்வுக்கு எதிராகவும் உள்ளன. ஒரு படிப்புக்கு பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு, நீட் தேர்வு என இரு தேர்வுகள் தேவையில்லை என்பதுதான் நீட் தேர்வை எதிர்ப்பதற்காக தமிழக அரசு கூறும் காரணமாகும்.

அப்படியானால், ஒரே பணிக்கு தகுதித் தேர்வு, போட்டிதேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது மட்டும் எப்படி சரியாக இருக்கும்?. எனவே, ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி அரசாணை 149 மற்றும் அதன்படியாக போட்டித்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com