மாபெரும் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை: தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜய் பாலாஜி

மாபெரும் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் விஜய் பாலாஜி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மாபெரும் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை: தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜய் பாலாஜி
Published on

சென்னை,

மாபெரும் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை 23.09.2026 முதல் 09.11.2026 வரை தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை, ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் சென்னை ஹவுஸ், 2-வது தளத்தில் நடைபெறும். இக்கண்காட்சியை அமைச்சர் அமைச்சர் விஜய் பாலாஜி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கொலு பொம்மை கண்காட்சி

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட அழகிய மற்றும் கலைநயமிக்க கொலு பொம்மைகளின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா சென்னை ஹவுஸ், 2-வது தளத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சி மற்றும் விற்பனையை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தொடங்கி வைத்து கொலு கண்காட்சியினை பார்வையிட்டார். நமது பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் கலாசாரத்தைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், கொலு பொம்மைகள் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி மற்றும் விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் விநாயகர், முருகப்பெருமான், சிவன்-பார்வதி, கிருஷ்ணர், ராமர்-சீதா, தசாவதாரம், அஷ்டலட்சுமி, செட்டியார் தம்பதி, திருமண காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தெய்வீக மற்றும் பாரம்பரிய கொலு பொம்மைகளும், கிராமிய வாழ்க்கை முறை, விவசாயம், பாரம்பரிய தொழில்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை பிரதிபலிக்கும் பல்வேறு வகையான பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் விலைகளில் பொம்மைகள் கிடைக்கின்றன. இதனால், பொதுமக்கள் தங்களது தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப பொம்மைகளை நேரில் பார்வையிட்டு தேர்வு செய்து வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நவராத்திரி காலத்தில் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது நமது பாரம்பரியத்துடனும் கலாசாரத்துடனும் பின்னிப்பிணைந்த ஒரு முக்கியமான நிகழ்வாகும். இதனை முன்னிட்டு, வீடுகளில் கொலு வைக்கத் தேவையான பல்வேறு வகையான பொம்மைகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு வாங்குவதற்கு இக்கண்காட்சி பொதுமக்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, கைவினைக் கலைஞர்களால் கைவினைத் திறனுடன் உருவாக்கப்பட்ட பாரம்பரிய பொம்மைகளை பொதுமக்கள் வாங்குவதன் மூலம் நமது பாரம்பரியக் கலை வடிவங்களைப் பாதுகாப்பதற்கும், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஆதரவு அளிக்க முடியும்.

அனைத்து நாட்களிலும் நடைபெறும்

இக்கண்காட்சி மற்றும் விற்பனை 23.09.2026 முதல் 09.11.2026 வரை தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை, ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் சென்னை ஹவுஸ், 2-வது தளத்தில் நடைபெறும். நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு வைக்க விரும்பும் பொதுமக்கள், குடும்பத்துடன் இக்கண்காட்சிக்கு வருகை தந்து, பல்வேறு வகையான பாரம்பரிய கொலு பொம்மைகளை பார்வையிட்டு, தங்களுக்குத் தேவையான பொம்மைகளை தேர்வு செய்து வாங்கிப் பயன்பெறலாம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சிக்கு வருகை தந்து, நமது பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கொலு பொம்மைகளை வாங்கிப் பயன்பெறுவதுடன், பாரம்பரிய கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைக் கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவு அளிக்குமாறு தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் கதர்த் துறை அரசு செயலாளர், ஆர்.லில்லி, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் முனைவர் சீ.சுரேஷ்குமார் தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் எஸ். அமிர்த ஜோதி, கைத்தறித் துறை இயக்குநர் பி. உமா மகேஸ்வரி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com