கிரானைட் குவாரிகள்: ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி 200 கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தினார்.
கிரானைட் குவாரிகள்: ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Published on

கலந்துரையாடல் கூட்டம்

கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் உள்ள கே.பி.என். லட்சுமி மஹாலில் நேற்று பா.ம.க. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சூளகிரி அருகே உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க அரசு 3,034 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதனை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்

சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாராயம் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு விருது வழங்குகிறார். அதே நாளில் கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கில் மது அதிகளவில் விற்பனை செய்த ஊழியர்களுக்கு நற்சான்றிதழை, மாவட்ட கலெக்டர் வழங்குகிறார். மதுவிலக்கு கொண்டு வருவதில், தி.மு.க. அரசின் நிலைப்பாடு, கொள்கை குறித்து முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். மது, போதைப்பொருள், ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

ரூ.1 லட்சம் கோடி இழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 200 கிரானைட் குவாரிகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அலுவலர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com