கயத்தாறு குளங்களில் சரளை மண், கரம்பை மண் கடத்தல்: விவசாயிகள் வேதனை

கனிம வளங்கள் கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்தி, குளங்களை பாதுகாக்கவும், விவசாயிகளுக்கு உரிய முறையில் கரம்பை மண் கிடைக்கவும் தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளங்களில் சரளை மண், கரம்பை மண் கடத்தல்.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து தினமும் 1,000 நடை லாரிகளில் சரளை மண், கரம்பை மண் கடத்தல் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

சரளை மண், கரம்பை மண் சட்டவிரோத விற்பனை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட குளங்களில், சுமார் 20-க்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து தினமும் செம்மண், சரளை மண் மற்றும் கரம்பை மண் ஆகியவை சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

சரளை மண் கடத்தல்

ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த்துறை வாயிலாக விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்காகக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கயத்தாறு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியத்திடம் பலர் அனுமதிச்சீட்டு பெற்றுள்ளனர். ஆனால், விவசாய பயன்பாட்டிற்கு பதிலாக, நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் தினமும் 500 முதல் 1,000 நடைகள் வரை இரவு பகலாக செம்மண் மற்றும் சரளை மண் வணிக நோக்கில் கடத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் வேதனை

மேலும், இப்பகுதியில் உள்ள வண்டல் மற்றும் கரம்பை மண் ஆகியவை உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்காமல், சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலைகளுக்கு இரவோடு இரவாக லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் சொந்த தேவைக்கு மண் எடுக்க அனுமதி பெற முடியாமல் அப்பகுதி விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

கயத்தாறு வட்டாரப் பகுதியில் தினமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்து கனிமவளத்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் தொலைபேசி மற்றும் மனுக்கள் மூலம் பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால், கனிமவளத்துறை அதிகாரிகள் தங்களின் கடமைக்காக ஏதோ வழியில் செல்லும் ஒரு சில லாரிகளை மட்டும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து, வாரத்திற்கு ஒரு வழக்கு என பதிவு செய்து கண்துடைப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை

கயத்தாறு பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கனிமவளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மற்றும் தவறு இழைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளங்கள் கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்தி, குளங்களை பாதுகாக்கவும், விவசாயிகளுக்கு உரிய முறையில் கரம்பை மண் கிடைக்கவும் தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com