தமிழருக்கு நடந்த பெரும் துரோகம்; நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேச்சு

மூப்பனார் பிரதமராக ஆக வேண்டிய அந்த தருணத்தில் தடுத்த சக்திகள் யார் என்று நமக்கெல்லாம் தெரியும் என்று நிர்மலா பேசினார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மலர்வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
“தமிழ்நாட்டில் மூப்பனார் எளிமையும், நேர்மையும், தேசியமும் கலந்து ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்தார். நாட்டில் எந்த மூலைக்கு போனாலும் மூப்பனாரை அனைவரும் அறிந்திருந்தார்கள். அவருக்கு ஒரு ஆளுமைத்திறன் இருந்தது. அதனால் அவர் சொன்ன எந்த ஒரு வார்த்தைக்கும் மதிப்பு இருந்தது. அந்த வார்த்தையை எடுத்துக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள்.
அந்த மாதிரி ஒரு ஆளுமை கொண்ட மூப்பனார் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அளவில் பிரதமராக ஆக வேண்டிய ஒரு சந்தர்ப்பம் உருவானது. பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அதை எடுத்துச் சொன்னார். ஆனால் மூப்பனார் பிரதமராக ஆக வேண்டிய அந்த தருணத்தில் ஆக விடாமல் தடுத்த சக்திகள் யார் என்று நமக்கெல்லாம் தெரியும்.
இன்றைக்கு தமிழ்நாடு, தமிழ், தமிழ் கலாச்சாரம் என்று திரும்பத் திரும்ப பேசுகிறவர்கள் ஒரு தமிழன் பிரதமராக ஆக வேண்டிய அந்த தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்தார்கள். இதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மறந்து விட முடியாது. அது எதோ ஒரு தமிழர் அல்ல, அந்த மாதிரி ஆளுமை கொண்ட மூப்பனாரைத் தடுத்தார்கள். அதுதான் தமிழருக்கு நடந்த ஒரு பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன்.
தமிழ் மக்கள் நல்லாட்சி கொடுங்கள் என்று கேட்கிறார்கள். போதைப்பொருள் எங்களுக்குத் தேவையில்லை. சாராயம் கேடுகெட்ட நிலையில் பரவுகிறது. ஒரு குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு அதனால் எந்த ஆதாயமும் இல்லை என்கிற நிலைமை வந்துவிட்டது. மக்கள் எல்லோருக்கும் தொண்டாற்றுவது நமது கடமை.
அதனால் நான் உங்கள் எல்லோருக்கும் சிரம் தாழ்த்தி, கைகூப்பி கேட்பது இந்த கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும். இந்த கூட்டணியின் மூலமாக மக்களுக்கு நாம் தொண்டாற்ற வேண்டும். சின்ன சின்ன உட்பூசல்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். முதிர்ச்சி அடைந்த பக்குவமாக இருக்கக்கூடிய ஒவ்வொரு தலைவர்களும் இங்கு இருக்கிறார்கள். எல்லோரும் கட்டுப்பாடுடன் அந்த நோக்கத்துக்காக ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும். நல்லாட்சி அமைய வேண்டும். அதுதான் நாம் மூப்பனாருக்கு செலுத்தும் பெரும் அஞ்சலியாகும்” என்றார்.






