திரு.வி.க. பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமைப் பரப்பு: ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமை பரப்பு நடவடிக்கைகளை ஐகோர்ட்டு நீதிபதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திரு.வி.க. பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமைப் பரப்பு: ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
Published on

சென்னை,

திரு.வி.க. பூங்கா, நேரு பூங்கா மற்றும் பனகல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமைப் பரப்பினை ஐகோர்ட்டு நீதிபதி எம். தண்டபாணி இன்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்ட திரு.வி.க. பூங்கா, நேரு பூங்கா மற்றும் பனகல் பூங்காவில் ஏற்கனவே இருந்த பசுமைப் பரப்பை மீண்டும் உருவாக்கி அதன் வசதிகளை உறுதி செய்திட ஐகோர்ட்டால் பொதுநல வழக்கில் உத்தரவினை வழங்கி, அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மற்றும் ஆலோசனை வழங்கிட ஆணையர் ஏற்படுத்தி உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், திரு.வி.க. பூங்கா, நேரு பூங்கா மற்றும் பனகல் பூங்கா ஆகிய மூன்று பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமை பரப்பு நடவடிக்கைகளை ஐகோர்ட்டு நீதிபதி எம். தண்டபாணி, இன்று (26.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஐகோர்ட்டு நீதிபதி, அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள திரு.வி.க. பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமைப் பரப்பினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமைப் பரப்பினை தொடர்ந்து பராமரித்திட அறிவுரைகள் வழங்கினார். இப்பூங்காவின் வெளிப்பகுதியில் உள்ள புல்லா அவென்யூ சாலையில் ரூபாய் 52.68 கோடி மதிப்பீட்டில் 1,600 மீட்டர் நீளத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள நேரு பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமைப் பரப்பினைப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பூங்காவில் மரக்கன்றினை நட்டார்.

பின்னர், கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பனகல் பூங்காவில் சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பார்வையிட்டு, பூங்காவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பசுமைப் பரப்புப் பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இந்த பூங்காவில் மேற்கொள்ளப்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிலையப் பணிகளுக்காக, போட் கிளப், நந்தனம், பனகல் பூங்கா, கோடம்பாக்கம், கோடம்பாக்கம் ரேம்ப் ஆகிய பகுதிகளில், பசுமைக்குழுவின் அனுமதியுடன் 278 மரங்கள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட ஒவ்வொரு மரத்திற்குப் பதிலாகவும் 12 மரங்கள் வைக்கும் நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால், நந்தனம் அரசு கலைக்கல்லூரி, திருவள்ளூர் மீனாட்சி கல்லூரி, அம்பேத்கர் சட்டக் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி ஆகியவற்றில் 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை 3,745 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இத்திட்ட செயலாக்கப் பகுதிகளில் இருந்து 137 மரக்கன்றுகளை அகற்றி, அதனை லேடி வெலிங்டன் கல்லூரியில் மீண்டும் நடப்பட்டுள்ளன.

இதன் விவரங்களை நீதிபதி கேட்டறிந்து ஆய்வு செய்து நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பசுமை குன்றாமல் பராமரித்திடவும், இப்பூங்காவில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் முடிவடையும்போது, இப்பூங்கா பகுதியில் மீண்டும் பசுமைப் பரப்பினை உருவாக்கிடவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com