திருச்சியில் 30-ந்தேதி முப்படை ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்

ஓய்வூதியத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன.
சென்னை,
சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் IDAS வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
"முப்படை ( ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண ஓர் மாபெரும் SPARSH ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ பரேடு கிரவுண்டில் ( Army Parade Ground) வரும் 30-ந்தேதி(திங்கட்கிழமை) அன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் உயிர் சான்று அடையாளம் காணுதல், SPARSH ஓய்வூதியத்தில் பெயர் மற்றும் இதர தகவல்களை திருத்துதல், ஓய்வூதிய தொகை திருத்துதல், ஆதார் புதுப்பித்தல், OROP குறைகள் நிவர்த்தி செய்தல், பாதுகாப்பு குடும்ப ஓய்வூதியத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் என பல்வேறு பணிகளுக்காக தனித்தனியே ஸ்டால்கள் அமைக்கப்பட்டு ஓய்வூதிய சேவைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் இந்த முகாமில் அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், பல்வேறு முப்படை ஆவண அலுவலகங்கள் (Record Offices), அனைத்து வங்கிகள் ஆகியவற்றின் அலுவலர்கள் பங்கு பெறவிருக்கின்றனர்.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய அரசின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் செய்தி & ஒளிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொள்கின்றனர். எனவே தமிழகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 30-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ள இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் ஓய்வூதிய குறைகளுக்கு தீர்வு காண அறிவுறுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக திருச்சி மற்றும் அருகாமை மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் இம்முகாமில் பெருந்திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர் தங்கள் படைபணிச் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் கார்டு, பான் கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசலுடன் நேரில் வந்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ள விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை 8807380165 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் ஓய்வூதியதாரர்களுக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்படும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






