கிரிண்டர் செயலி பழக்கத்தால் விபரீதம்: செல்போன், பணத்தை பறிகொடுத்த என்ஜினீயர்


கிரிண்டர் செயலி பழக்கத்தால் விபரீதம்: செல்போன், பணத்தை பறிகொடுத்த என்ஜினீயர்
x

சமூகவலைதள பழக்கத்தால் தற்போது விதவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

தக்கலை,

மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்தவர் வினுகுமார் (வயது 39). என்ஜினீயரான இவர் செல்போனில் கிரிண்டர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இந்த செயலி மூலம் பள்ளியாடி பகுதியை சேர்ந்த பென்டர் பின் (20), சாலமன் பிரபு (24) ஆகியோருடன் வினுகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலையில் தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பகுதியில் நிற்பதாகவும், அங்கு வரும்படி வினுகுமாரை இருவரும் அழைத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு அவர் சென்றார். பென்டர்பின், சாலமன்பிரபு மற்றும் இன்னொருவர் என 3 பேர் அங்கு நின்றுள்ளனர். அந்த 3 பேரும் திடீரென வினுகுமாரிடம் இருந்த செல்போனை பறித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வினுகுமாரிடம் செல்போனுக்கு உரிய பாஸ்வேர்டை பென்டர்பின் கேட்டுள்ளார். ஆனால் வினுகுமார் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கம்பியால் வினுகுமாரை தாக்கி விட்டு செல்போன் மற்றும் அவரது சட்டை பையில் இருந்த ரூ.1,000 பறித்து விட்டு தப்பினர். இந்த தாக்குதலில் காயமடைந்த வினுகுமார் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story