நிலத்தடி நீர் திருட்டுக்கு இன்ஸ்பெக்டர் உடந்தையாக இல்லை அறிக்கை தாக்கல் செய்த போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு கண்டனம்

நிலத்தடி நீரை திருடுபவர்களுக்கு உடந்தையாக இன்ஸ்பெக்டர் செயல்படவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்த போலீஸ் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிலத்தடி நீர் திருட்டுக்கு இன்ஸ்பெக்டர் உடந்தையாக இல்லை அறிக்கை தாக்கல் செய்த போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு கண்டனம்
Published on

சென்னை,

சென்னை நங்கநல்லூரில் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து, பெரும்தொகைக்கு சிலர் விற்பனை செய்வதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து ஆய்வு செய்ய வக்கீல் எல்.சந்திரகுமார் என்பவரை நியமித்தது. அவர் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் திருடி விற்பனை செய்யும் கும்பலுக்கு உடந்தையாக பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் நடராஜூம், உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவரும் உள்ளனர். ஆய்வு செய்த எனக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர் நடராஜ் தன் அனுமதியில்லாமல் எப்படி ஆய்வு செய்யலாம்? என்று மிரட்டினார் என்று கூறியிருந்தார்.

இன்ஸ்பெக்டரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, 2 இன்ஸ்பெக்டர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதவிர வக்கீல் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையிலும், சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, போலீஸ் கமிஷனர் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இல்லை என்று கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பிற அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை என்பதால் தான், போலீஸ் கமிஷனரை விசாரிக்க உத்தரவிட்டோம். ஆனால், அவரும் இப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். யாரைத்தான் நம்புவது என்று தெரியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், வேறு ஒரு புலன்விசாரணை முகமைக்குத்தான் விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும்.

நிலத்தடி நீர் திருடியதாக நிலத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், தண்ணீரை எடுத்து சென்ற லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் எப்படி விசாரணை நடத்தி, இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்? என்பது தெரியவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர். பின்னர், விசாரணையை நாளைக்கு (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்து, அன்று அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com