

தூத்துக்குடி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-1 முதல்நிலை தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்வை மாவட்டத்தில் 79 சதவீத தேர்வர்கள் ஆர்வமுடன் எழுதினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்காக காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி, புனித லசால் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சிதம்பரம் கல்லூரி உள்ளிட்ட 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 5,143 தேர்வர்களில், 4,047 தேர்வர்கள் காலையிலேயே தங்களது மையங்களுக்கு ஆர்வமுடன் வந்தவண்ணம் இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்புக்கு இடையே தேர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-1 தேர்விற்காக பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எவ்வித முறைகேடுகளும் இன்றி, விதிமுறைகளின்படி முறையாக நடக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன், தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்றார்.
தேர்வு அறைகளில் தேர்வர்களுக்கு செய்யப்பட்டுள்ள குடிநீர் வசதி, வெளிச்சம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அவர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், தேர்வு பணிகளில் எவ்வித தொய்வும் இன்றி, டி.என்.பி.எஸ்.சி-யின் விதிமுறைகளை துல்லியமாக பின்பற்றி தேர்வை நடத்த வேண்டும் என்று அங்கிருந்த கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கலெக்டர் விஷு மகாஜன் உத்தரவிட்டார்.
கலெக்டரின் இந்த ஆய்வின் போது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தேர்வு வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர். கலெக்டரின் நேரடி மேற்பார்வையால் தூத்துக்குடியில் தேர்வு பணிகள் மிகவும் சுறுசுறுப்பாகவும், கட்டுப்பாட்டுடனும் நடைபெற்றன.
தேர்வு தொடங்கியதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாவட்ட அளவில் விண்ணப்பித்திருந்தவர்களில் 79 சதவீதம் பேர் தேர்வில் நேரில் பங்கேற்று தேர்வு எழுதினர். மீதமுள்ள 21 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு மையங்களுக்குள் தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வர வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே கடுமையான விதிகளை விதித்திருந்தது. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி தாமதமாக வந்த சில தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் எவ்வளவு கெஞ்சி கேட்டும் அதிகாரிகள் விதிகளை சுட்டிக்காட்டி மறுத்துவிட்டனர். இதனால், நீண்ட நாட்களாக படித்துவிட்டு வந்த தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.