

சென்னை,
26 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 29-ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்) -க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (23.06.2026) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் 30.06.2026 முதல் 29.07.2026 பி.ப வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (தொகுதி I பணிகள்) -க்கான முதல் நிலைத் தேர்வு 06.09.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.