குரூப்-4 முறைகேடு விவகாரம்: ராமேசுவரம், கீழக்கரை வட்டாட்சியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக ராமேசுவரம், கீழக்கரை வட்டாட்சியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரூப்-4 முறைகேடு விவகாரம்: ராமேசுவரம், கீழக்கரை வட்டாட்சியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
Published on

சென்னை,

குரூப்-4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது, தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தேர்வர்கள் பலர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதுதவிர ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில், பிற மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அதன்படி, கடந்த 13-ந்தேதி நடைபெற்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் குரூப்-4 முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் இருவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 2019ல் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் முதன்மை பெற்றது எப்படி என்று இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com