குரூப்-4 தேர்வு முறைகேடு: தமிழகம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டை 2 இடைத்தரகர்கள் கைது

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குரூப்-4 தேர்வு முறைகேடு: தமிழகம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டை 2 இடைத்தரகர்கள் கைது
Published on

சென்னை

தமிழகத்தை உலுக்கும் குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்கள் உள்ளிட்ட 12 பேர் ஏற்கனவே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் மற்ற பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் குரூப் 4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக தெரிகிறது. அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கவே கைது செய்யப்பட்ட 2 தாசில்தார்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். விழுப்புரத்தை சேர்ந்த 10 பேரிடம் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. முறைகேடு தொடர்பாக இடைத்தரகராக செயல்பட்ட ஒருவர் நெல்லையில் கைது செய்யப்பட்டு உள்ளார். முத்து ராமலிங்கம் என்ற மாணவனிடம் ரூ.12 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட வைத்ததாக ராதாபுரம் அருகே விஜயாபதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர், விழுப்புரம், சிவகங்கை,நெல்லை, தஞ்சை என 5 மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள சிவராஜ், சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com