நாளை முதல் ‘ஜி.எஸ்.டி. 2.0’ அமலாகிறது.. குறையும் பொருட்கள் விலை..!

அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.
நாளை முதல் ‘ஜி.எஸ்.டி. 2.0’ அமலாகிறது.. குறையும் பொருட்கள் விலை..!
Published on

வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. இதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது.

முன்னதாக இந்தியர்களின் சேமிப்பு வீதம் தொடர்ந்து குறைந்து, கடன் சுமை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. எனவே இதனை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி தள்ளுபடியை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது, ஜி.எஸ்.டி. வரியிலும் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது 5 மற்றும் 18 என்ற 2 வரி விகிதங்களாக எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அதனால் 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிக்கும், 28 சதவீதத்தில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீதத்திற்கும் வருகின்றன.

இந்நிலையில் இந்த புதிய விகிதம் நாளை முதல் அமலுக்கு வர உள்ளதால், அன்றிலிருந்து மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.

அத்தியாவசிய உணவுப்பொருட்கள்

18 சதவீதம் இருந்த ரெடிமேட் பரோட்டா, 5 சதவீதத்தில் இருந்த சப்பாத்திக்கும் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் விலை ஒன்றுக்கு 50 பைசா முதல் ரூ.5 வரை குறைகிறது.

சாக்லெட்டுகள், பாஸ்தா, ரெடிமேட் நூடூல்ஸ் ஆகியவை 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால் அதன் விலையும் கணிசமாக குறைகிறது.

பன்னீருக்கு இருந்த 5 சதவீத வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால், ஒரு கிலோ பன்னீர் விலை ரூ.300 ஆக இருந்தால் ரூ.15 குறைந்து விடுகிறது. அதே போல் நெய், வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு இருந்த 12 சதவீத வரி 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால், அதன் விலையும் குறைகிறது. உதாரணமாக ஒரு கிலோ நெய்-வெண்ணெய் ரூ.600 விற்பனை செய்யப்பட்டால் ரூ.40 குறைந்து ரூ.560 ஆகிறது.

உலர் பழங்கள், நொறுக்குத்தீனி மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால் விலை குறைக்கப்பட்டு உள்ளது. மக்களின் வீட்டு உபயோக பொருட்களான ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், 32 இன்ச்-க்கு மேல் உள்ள டி.வி.க்கள், டிஷ் வாஷர் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரிக்குள் வந்து விட்டது. இதனால் இந்த பொருட்களின் சராசரி விலையில் இருந்து 10 சதவீதம் குறைகிறது. உதாரணமாக ரூ.40 ஆயிரம் விற்ற ஏ.சி., இப்போது ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.36 ஆயிரம் ஆகி இருக்கிறது.

குறையும் கார்கள் விலை

ஆடம்பர கார்களை தவிர 1,200 சி.சி.க்கும் குறைவாக உள்ள கார்கள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் அதன் விலைக்கு ஏற்ப விலை குறைவு இருக்கிறது. அதாவது ரூ.65 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கார் விலை குறைகிறது.

350 சி.சி.க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள் வரி 28-ல் இருந்து 18 ஆக குறைந்து விட்டது. அதனால் அதன் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே இருந்த 5 சதவீத வரி தற்போதும் தொடர்வதால் அதில் எந்த மாற்றமும் இல்லை.

மருத்துவ உபகரணங்கள், தெர்மாமீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், ரத்த சர்க்கரை கண்டறியும் கருவிகள், சில மருந்துகள், மாத்திரைகள் ஆகியவை 18 மற்றும் 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்தும் மூக்கு கண்ணாடிகள், லென்சுகள் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால் பெரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.1,000 ஆக இருந்தால் இப்போது அதன் விலை சராசரியாக 25 சதவீதம் அளவுக்கு குறைந்து ரூ.750 ஆகி உள்ளது.

பூஜ்ஜிய வரி

மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில், ரப்பர்கள், மேப்-புகள் ஆகியவை பூஜ்ஜிய வரிக்கு வந்து விட்டதால் அதன் விலை குறைந்துள்ளது.

இது தவிர சோப்புகள், டூத் பேஸ்ட், ஷாம்புகள், தலைக்கு தேய்க்கும் எண்ணெய்கள் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மாறி இருப்பதால் குறைந்தது ரூ.6.50-ல் இருந்து ரூ.40 வரை விலை குறைந்துள்ளது. சராசரியாக 10 சதவீதம் வரை பொருட்களுக்கு ஏற்ற விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

துணிமணிகள் ஏற்கனவே இருக்கும் 5 சதவீத வரியில் மாற்றம் இல்லையென்றாலும் ரூ.2,500 மேல் இருக்கும் ஆடைகள் 12 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதே போல் குல்ட் மெத்தைகள் போன்றவையும் வரி உயர்ந்து உள்ளதால் அதன் விலைகள் அதிகரித்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு பெரிதும் தேவையான சமையல் மற்றும் சாப்பாட்டு பாத்திரங்கள் பானைகள், குக்கர், தட்டுகள், கரண்டிகள், வாணலி, டவா, அடுப்பு, கிண்ணங்கள், கண்ணாடிகள், கத்தி, மேசை கரண்டி, ஸ்பூன் வகைகள் ஆகியவற்றில் பெரும்பாலும் 12, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால் விலை குறைந்து உள்ளது.

கட்டுமான பொருட்கள்

சைக்கிள்கள் 12, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக ஒரு சைக்கிளுக்கு விலைக்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை குறைந்து விட்டது.

கட்டுமான பொருளான சிமெண்ட் வரி 28-ல் இருந்து 18 ஆக மாறி இருப்பதால் மூடைக்கு ரூ.40 வரை குறைகிறது. அதே நேரத்தில் கம்பிகள் ஏற்கனவே இருக்கும் 18 சதவீதத்தில் இருப்பதால் அதன் விலையில் மாற்றம் இல்லை.

சிகரெட், புகையிலை, ஆடம்பர கார்கள் ஆகியவற்றின் வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் ஆகி விட்டதால் அதன் விலை எல்லாம் அதிகரிக்கும்.

இந்த விலை குறைப்பை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொருட்களின் விலை குறையாமல் அதிக விலை வசூலிக்கப்பட்டால் மக்கள் நேரடியாக புகார் அளிக்க நுகர்வோர் புகார் ஒருங்கிணைந்த இணையதளம் https://consumerhelpline.gov.in மற்றும் தேசிய நுகர்வோர் உதவி எண் 1800-11-4000 மற்றும் 1915 ஆகியவற்றில் சிறப்பு பிரிவு திறக்கப்பட்டு உள்ளது. செல்போனில் இருந்து 14404 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com