கடலை மிட்டாய்க்கு ஜி.எஸ்.டி. விலக்கு: மத்திய மந்திரியிடம் துரை வைகோ எம்.பி. நேரில் வலியுறுத்தல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் காரணமாக அங்கிருந்து வர வேண்டிய ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.
கடலை மிட்டாய்க்கு ஜி.எஸ்.டி. விலக்கு: மத்திய மந்திரியிடம் துரை வைகோ எம்.பி. நேரில் வலியுறுத்தல்
Published on

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் தொழிலைப் பாதுகாக்க, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலை புதுடில்லியில் நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: தமிழகத்தின் பாரம்பரிய உணவான கோவில்பட்டி கடலை மிட்டாய் உலகப் புகழ்பெற்ற புவிசார் குறியீடு (GI Tag) பெற்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் காரணமாக, அங்கிருந்து வர வேண்டிய ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன.

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

நிலக்கடலை மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ளனர். எனவே தேங்கியுள்ள பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்ய ஏதுவாக, ஜி.எஸ்.டி. வரியிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்க வேண்டும்.

சத்து நிறைந்த இந்த பாரம்பரிய உணவுப் பொருளை, மத்திய அரசின் 'பிரதமர் போஷண்' (மதிய உணவுத் திட்டம்) திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப் பரிசீலிக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட ஏற்றுமதி ஆர்டர்களால் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்ய, இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் (ECGC) மூலம் உரிய ஆதரவு வழங்க வேண்டும்.

வளைகுடா நாடுகளைத் தவிர்த்து, பிற நாடுகளில் புதிய ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய APEDA மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் உதவி செய்ய வேண்டும். பாரம்பரியமிக்க இந்தத் தொழிலையும், அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மத்திய அமைச்சகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என அந்த மனுவில் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com