

மதுரையில் ஜி.எஸ்.டி. அதிகாரி போல் நடித்து ரூ.41 ஆயிரத்தை நூதன முறையில் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
மோசடி
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்கியராம் (வயது 47), ஜவுளி வியாபாரி. சம்பவத்தன்று விளக்குத்தூண் பகுதியில் துணிகளை வாங்கி கொண்டு ஊருக்கு புறப்பட்டார். அப்போது அவர் கீழமாரட்வீதியில் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது ஒருவர் அவரை வழிமறித்தார். அவர் பாக்கியராமிடம் தான் ஜி.எஸ்.டி. அதிகாரி என்றும், உங்களை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி பாக்கியராம் வைத்திருந்த பில்களை வாங்கினார்.
மேலும் பாக்கியராம் வைத்திருந்த 48 ஆயிரம் ரூபாயை எண்ணுவது போல வாங்கி மீண்டும் அந்த பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். பாக்கியராம் அந்த பணத்தை எண்ணிய போது அதில் 18 ஆயிரம் ரூபாய் குறைவாக இருப்பது தெரியவந்தது. அது குறித்து அவரிடம் கேட்ட போது அந்த நபர் பணத்தை கொடுக்காமல் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி விட்டார். இது குறித்து பாக்கியராம் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.
ரூ.41 ஆயிரம் மோசடி
இதேபோல் மதுரை ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (69). இவர் நகைக்கடை ஊழியர். சம்பவத்தன்று காரைக்குடியிலிருந்து மதுரை வந்த இவரை கீழவெளி வீதியில் வைத்து ஒருவர் ஜி.எஸ்.டி. அதிகாரி என்றுகூறி, திருநாவுக்கரசுவிடமிருந்த வசூல் பணம் ரூ.45 ஆயிரத்தை வாங்கி சோதனை செய்துவிட்டு திருப்பிக்கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அவர் அந்த பணத்தை தனது முதலாளியிடம் கொடுத்த போது அதில் ரூ.23 ஆயிரத்தை காணவில்லை. இந்த பணத்தை அந்த நபர் திருடியது தெரியவந்தது. உடனே இது குறித்து திருநாவுக்கரசும் விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தார்.
கைது
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். 2 பேரிடமும் ஜி.எஸ்.டி. அதிகாரி போல் நடித்து மோசடி செய்தது ஒரே நபர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் திடீர்நகரை சேர்ந்த ரவுடி ஹரிகிருஷ்ணன் என்ற ஆறுமுகம் (52) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.