ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள்: மத்திய, மாநில அரசுகள் பேசி முடிவு எடுத்தால் சாத்தியமாகும்: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் அமர்ந்து பேசி முடிவு எடுத்தால் மட்டுமே ஒரே நாடு ஒரே விலை என்பது சாத்தியமாகும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள்: மத்திய, மாநில அரசுகள் பேசி முடிவு எடுத்தால் சாத்தியமாகும்: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
Published on

மத்திய பட்ஜெட்

சென்னை தியாகராயநகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் சென்னை மக்கள் மன்றம் சார்பில் மத்திய பட்ஜெட்-2021 குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மன்ற தலைவர் டாக்டர் எம்.ராம்குமார் தலைமை தாங்கினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். இளம் வாக்காளர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்மலா சீதாராமன் பரிசுத்தொகையை வழங்கினார்.

பின்னர், சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்களும் வருமாறு:-

பெட்ரோலிய பொருட்கள் விலை

கேள்வி:- பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?

பதில்:- தர்மசங்கடமான கேள்வியாக இருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள்தான் கச்சாப்பொருட்களை இறக்குமதி செய்கின்றன, சுத்திகரிக்கின்றன, வினியோகம் செய்வதுடன் விலையை நிர்ணயம் செய்கின்றன. மத்திய, மாநில அரசுகள் வரியைக் குறைக்க கலந்தாலோசிக்க வேண்டும். நான் ஒரு மத்திய மந்திரி மட்டுமே. இந்த விஷயத்தில் என்னால் தனியாக எந்த முடிவும் எடுக்க இயலாது. இந்தியரில் ஒருவராக எனக்கும் எரிபொருள் விலை குறைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சில்

கேள்வி:- பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் (ஜி.எஸ்.டி.) கொண்டுவர வாய்ப்பு உள்ளதா?

பதில்:- பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும். இதற்காக சட்டத்திருத்தம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே வகுக்கப்பட்ட சட்டத்தின்படி, மத்திய, மாநில அரசுகள் உட்கார்ந்து பொறுமையாக பேசி ஒரு முடிவு எடுத்தால் மட்டுமே நாடு முழுவதும் அனைத்து பகுதியிலும் ஒரே விலை, அதாவது ஒரே நாடு, ஒரே விலை என்பது சாத்தியாகும்.

புதிய தொழில்முனைவோர்

கேள்வி:- பெண் தொழில்முனைவோருக்கு உங்களின் ஆலோசனை என்ன?

பதில்:- ஆண் தொழில்முனைவோர், பெண் தொழில்முனைவோர் இருவரும் சமமே. எனவே இருவருக்கும் ஒரே ஆலோசனைதான். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், வாய்ப்புகளைப் சரியாக பயன்படுத்தி அவர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

கேள்வி:- எழில்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் கார் நிறுத்த ஒப்பந்தம் பெறுவதற்கு புதிய தொழில்முனைவோருக்கு அனுமதி கிடைப்பது அரிதாக உள்ளதே?

பதில்:- புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுத்தப்பட்டு உள்ளது. இனி இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால் நேரடியாக என்னுடைய கவனத்துக்கு கொண்டு வாருங்கள். உடனடியாக தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மன்ற செயலாளர் செல்லா கே.சீனிவாசன், பொருளாளர் எஸ்.சுந்தர்ராமன் மற்றும் கே.டி.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com