

கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புத்தூர்வயல் மற்றும் விமலகிரி குடியிருப்புப் பகுதிகளில், அதிகாலை நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்தது.
குடியிருப்பு வீதிகளின் வழியே உலா வந்த அந்த யானை, அங்கிருந்த ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் நுழைந்தது. அங்கு செழிப்பாக வளர்க்கப்பட்டிருந்த கரும்புகளை தனது தும்பிக்கையால் வேரோடு பிடுங்கி எடுத்தது.
பிடுங்கிய கரும்புகளை வாயில் கவ்விக்கொண்டு, நட்டநடுச்சாலையில் மிகவும் நிதானமாக, அதனை சுவைத்துக்கொண்டே உலா வர தொடங்கியது. அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களும், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் சாலையில் கரும்புடன் கம்பீரமாக நடந்து வந்த யானையை பார்த்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் வனத்துறையினர், யானையை வனப்பகுதி விரட்டினர். தொடர்ந்து, வனப்பகுதியில் முகமிட்ட யானையை கும்கி யானைகள் உதவியுடன் முதுமலைக்கு விரட்டு பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு முடிவுக்கு வந்தது.