

கூடலூர்,
கூடலூர் அருகே நள்ளிரவில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து புலி தப்பியது. அதை டிரோன் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் 4-ம் நெம்பர் பகுதியில் கடந்த மாதம் 2 பேரை புலி கடித்து கொன்றது. இதைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் புலியை பிடிக்கும் பணி தொடங்கியது. புலி அடர்ந்த காடுகளிலும், பாறைகளிலும் மறைந்து வாழ்வதால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 2 வாரங்களாக தேடி வருகின்றனர்.
முதுமலை, கோவை, தேனி மற்றும் பல்வேறு கோட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 90-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், வன எலைட் படையினர் மற்றும் 3 கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர புலியை கண்டறிந்து பிடிக்க 3 அதிநவீன தெர்மல் டிரோன்கள் மூலம் தேடப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் குடியிருப்புகள், தேயிலை தோட்டங்கள், வனம் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் 130 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 13 இரும்பு கூண்டுகளையும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் கூடலூர் கெவிப்பாரா பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் பாறை மீது புலி ஒன்று நடமாடுவதை அப்பகுதி மக்கள் கண்டனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்தனர். மேலும் புலியும் அங்கிருந்து இடம் பெயர்ந்து லாரஸ்டன் வனத்துக்குள் செல்வதை டிரோன்கள் மூலம் வனத்துறையினர் கண்காணித்தபடி சுற்றி வளைத்தனர்.
இந்த நிலையில் லாரஸ்டனில் இருந்த புலி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி பாரம் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றதை நள்ளிரவில் வனத்துறையினர் உறுதி செய்தனர். இருப்பினும் விடிய விடிய அப்பகுதியில் முகாமிட்டு புலி வேறு இடத்துக்கு சென்று விடாமல் இருக்க வனத்துறையினர் இன்று 17-வது நாளாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் இதுவரை உறுதி செய்யவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறும்போது, டிரோன்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சுமார் 8 முதல் 10 வயது வரையிலான ஆண் புலி என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து டிரோனில் புலியை தேடி வருகிறார்கள்.
இதனிடையே 2 கும்கி யானைகளும் புலியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.குறிப்பிடத்தக்கது.