

சென்னை,
நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு, குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை வரவேற்கிறேன். மிகக்கொடிய நோயான புற்றுநோயை நுகர்வோரிடம் பரப்பும் குட்கா விற்பனை, அந்த விற்பனையை அனுமதித்ததில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வெட்கமே இல்லாமல் பெற்ற பட்டப்பகல் மாமூல் லஞ்சம் உள்பட பல அதிர்ச்சித் தகவல்கள் இந்த குட்கா விசாரணையில் வெளிவந்து, பலருடைய முகமூடியைக் கிழித்தெறியும் என்று நம்புகிறேன்.
மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீதான 40 கோடி ரூபாய் ஊழலுக்கும் வித்திட்ட குட்கா ஊழல் வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த விசாரணையை அ.தி.மு.க. அரசு வேண்டுமென்றே முடக்கி வைத்தது.