குட்கா ஊழல்: நான் டிஜிபி ஆவதைத் தடுக்க திட்டமிட்டு நடந்த சதி - முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்

குட்கா ஊழலில் எனது பெயரை சேர்த்தது 100 சதவீதம் ஏதோ நோக்கம் இருப்பதாக கருதுகிறேன் என முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறினார். #CommissionerGeorge
குட்கா ஊழல்: நான் டிஜிபி ஆவதைத் தடுக்க திட்டமிட்டு நடந்த சதி - முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்
Published on

சென்னை

தமிழகத்தில் நேற்று முன்தினம் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, பாண்டிச்சேரி. பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. சிபிஐ அதிகாரிகள் 450 பேர் இதில் ஈடுபட்டார்கள். மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.

டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இருக்கின்ற அனைத்து உண்மைகளின் அடிப்படையில் பேசுகிறேன். தி.மு.க வழக்கறிஞர் தனது மனுவில் எனது பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

சென்னை காவல் ஆணையராக நான் இருந்த போது நான் யார் மீது குற்றம் சுமத்தவில்லை. குட்கா ஊழலில் நான் ஆணையராக இருந்த போது குட்கா ஊழல் தொடர்பான வதந்திகள் பரப்பபட்டது. நான் கமிஷ்னராக இருந்தபோது காவல்துறை உயரதிகாரிகளுக்கு குட்கா விவகாரத்தில் தொடர்பு இருந்ததாக பேசப்பட்டது. குட்கா புகார் தொடர்பாக நான் யாரையும் சந்திக்கவில்லை, என்னையும் யாரும் வந்து சந்திக்கவில்லை. குட்கா ஊழல் குறித்து நானும் முதற் கட்ட விசாரணை நடத்தினேன். குட்கா குடோன் என கூறப்பட்ட இடத்தில் நடத்திய சோதனையில் புகையிலைப்பொருள் எதுவும் இல்லை.

அப்போதைய மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமார் சரியாக பணியாற்றாததால் அவரை கண்டித்துள்ளேன். சட்டவிரோத நடவடிக்கைகளை கூடுதல் ஆணையர் ஜெயக்குமார் மறைத்துள்ளார். குட்கா விவகாரம் தொடர்பாக அப்போதைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை அளிக்காதது ஏன்?எனக்கு கீழ் பணியாற்றிய அனைவரிடமும் கடுமையாக நடந்து, பணியை சிறப்பாக செய்ய அறிவுறுத்தியுள்ளேன். உளவுப்பிரிவு இணை ஆணையராக இருந்த வரதராஜூவுக்கு ஊழல் பற்றி ஏன் தெரியவில்லை?

எனவேதான் இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டேன். குட்கா புகார் கூறப்பட்ட காலத்தில் நான் பணியில் இல்லை, சிபிஐயின் எஃப்.ஐ.ஆரில் என் பெயர் இல்லை. குட்கா விவகாரத்தில் 2016 ஏப்ரல், மே, ஜூனில் சோதனை நடந்தது. நான் பதவிக்கு வந்தது செப்டம்பரில் தான்.

நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அன்பழகன் எனது பெயரை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

33 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பான சேவையாற்றி பணியை முடித்துள்ளேன். குட்கா விவகாரம் விசாரணையில் இருப்பதால் நான் சந்திக்கும் பிரச்சனையை கூற விரும்பவில்லை. குட்கா பிரச்சினையில் என்னை குறிவைத்து செயல்படுவது வருந்ததக்கது. குட்கா விற்பனை போன்ற பெரிய விவகாரம் காவல் ஆணையரின் ஆதரவுடன் மட்டுமே நடக்குமா?

சிபிஐ சோதனையில் வீட்டில்தான் இருந்தேன். சில அதிகாரிகள் துரோகம் செய்து விட்டனர். நான் டிஜிபி ஆவதைத் தடுக்க திட்டமிட்டு நடந்த சதியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com