குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சி.பி.ஐ. அதிரடி விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் சிக்கியுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சி.பி.ஐ. அதிரடி விசாரணை
Published on

சென்னை,

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் கைமாறியுள்ள இந்த வழக்கில் குட்கா ஆலை அதிபரும், தொழில் அதிபருமான மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அந்த சம்மனை ஏற்று இன்ஸ்பெக்டர் சம்பத் நேற்று காலை 10 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். இவர் தற்போது தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.

குட்கா ஊழல் அரங்கேறியபோது இன்ஸ்பெக்டர் சம்பத் செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். சி.பி.ஐ. அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு இன்ஸ்பெக்டர் சம்பத்தை திணறடித்தார்கள்.

இன்ஸ்பெக்டர் சம்பத்தின் சென்னை ராயபுரம் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கும் இன்ஸ்பெக்டர் சம்பத்தை அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா ஆலை அதிபர்களிடம் நேரடியாக லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியலில் இன்ஸ்பெக்டர் சம்பத்தும் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. லஞ்சம் பெற்றதற்கான ஏராளமான ஆவணங்களை இன்ஸ்பெக்டர் சம்பத் வீட்டில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. நேற்று இரவு விசாரணை முடிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சம்பத் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com