

சென்னை,
குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இவர்களது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்ற காவலை வருகிற 9-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். இதற்கிடையே, தனது மகள் திருமணம் 29-ந் தேதி நடக்க உள்ளதால் தனக்கு 10 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று மாதவராவ் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, 26-ந் தேதி(நேற்று) முதல் வருகிற 1-ந் தேதி வரை ஒரு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். மீண்டும் 2-ந் தேதி காலை 10 மணிக்கு மாதவராவை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.