கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவன காவலாளிகள்; வாகன ஓட்டிகள் அச்சம்

கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தனியார் நிறுவன காவலாளிகள் ஈடுபடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகின்றனர்.
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவன காவலாளிகள்; வாகன ஓட்டிகள் அச்சம்
Published on

தனியார் நிறுவன காவலாளிகள்

சென்னை-திருச்சி மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால் கூடுவாஞ்சேரி சிக்னல், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம், சீனிவாசபுரம், தைலாவரம், பொத்தேரி, காரணைப்புதுச்சேரி கூட்ரோடு போன்ற பகுதிகளில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையை பொதுமக்கள் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

ஏனென்றால் முக்கியமாக பொதுமக்கள் அடிக்கடி சாலையை கடக்கும் சிக்னல் உள்ள இடங்களில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக போக்குவரத்து போலீசார் இருப்பதிலை. இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தனியார் நிறுவன காவலாளிகள் போலீசார் அணிந்து கொள்வது போல ரெப்லட் ஜாக்கெட் அணிந்து கொண்டு கையில் நில், செல் என்ற வாசகம் அடங்கிய அட்டையை வைத்துக்கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் தூரத்தில் இருந்து வாகன ஓட்டிகள் தனியார் நிறுவன காவலாளி போக்குவரத்தை ஒழுங்குப்படும் பணியில் ஈடுபடுவதை பார்த்தவுடன் வாகனங்களை நிறுத்தாமல் அலட்சியமாக செல்கின்றனர். ஆனால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்காக தனியார் நிறுவன காவலாளி வாகனங்களை நிறுத்தி விடுவார் என்ற நம்பிக்கையில் சாலையை கடக்கும் பொதுமக்கள் சில சமயங்களில் விபத்தில் சிக்கி கை, கால்கள் முறிவு ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

சென்னை திருச்சி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் நடைபெறாத நாளே கிடையாது. இதனால் விபத்து ஏற்படும் அபாயகரமான சாலையாக ஜி.எஸ்.டி. சாலை மாறி உள்ளது. ஏன்னென்றால் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் யாராவது ஒருவர் உயிரிழந்து விடுகின்றனர். பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது பெருங்களத்தூர் பகுதியில் இருந்து மகேந்திரா சிட்டி வரை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் போக்குவரத்து போலீசார் குறைந்த எண்ணிக்கையிலே ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை காரணமாகவே தனியார் நிறுவன காவலாளிகளும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். அப்படி போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவன காவலாளிகள் தங்களை நிஜ போலீசார் என்று நினைத்து கொண்டு பொதுமக்களிடம் அவ்வப்போது அத்துமீறி நடக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவன காவலாளிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

கோரிக்கை

தனியார் நிறுவன காவலாளிகள் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போது வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உடனடியாக கூடுவாஞ்சேரி சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசாரை அதிக எண்ணிக்கையில் நியமனம் செய்து விபத்து ஏற்படாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற தனியார் நிறுவன காவலாளிகளை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com