திடக்கழிவுகளை அகற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

தகுதியுடைய அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களும், வருகின்ற 15 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவுகளை அகற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் திடக்கழிவுகளை அகற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திடக்கழிவுகளை வழங்குதல், குப்பைகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்டவற்றை தனித்தனியே பிரித்து வழங்குதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.07.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026-ன்படி, 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த தளப்பரப்பளவு கொண்ட கட்டடம்; அல்லது தினசரி 40,000 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர் பயன்பாடு கொண்ட நிறுவனம்; அல்லது தினசரி 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவுகளை உருவாக்கும் நிறுவனம்/அமைப்பு ஆகிய அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள்/அமைப்புகள் "பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் என வகைப்படுத்தப்படுகின்றன:

அறிவுறுத்தல்கள்

மேற்கண்ட வரையறையின்படி, நிறுவன அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர பெரிய நிறுவனங்கள் அனைத்தும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் என்ற வகைக்குள் அடங்குகின்றன.

எனவே, திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026-ன் விதிமுறைகளின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கும் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

* கட்டாயப் பதிவு : அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களும், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதள இணைப்புகளில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

* பதிவு செய்வதற்கான காலக்கெடு : தகுதியுடைய அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களும், வருகின்ற 15 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்து விட வேண்டும்.

* விதிமீறலுக்கான நடவடிக்கை : உரிய காலக்கெடுவிற்குள் பதிவு செய்யத் தவறும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் மீது, திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026, பின்பற்ற தவறும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கு: குறைந்தபட்சமாக ரூ.5,000/- மற்றும் அதிகபட்சமாக ரூ.25,000/- வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், விதிமீறல் தொடரும் பட்சத்தில், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகளின்படி தேவையான பிற அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

திடக்கழிவு மேலாண்மை

01.06.2026 முதல் 30.06.2026 வரை திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றத் தவறிய 120 பெருமளவு கழிவு உருவாக்குபவர்களுக்கு மொத்தம் ரூ.5,95,000/- அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாண்பமை உச்சநீதிமன்றம், 25.05.2026 அன்று வழக்கு ஒன்றில் (6174/2023-இல்) வழங்கிய உத்தரவின்படி, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026னை, மீறுதல் அல்லது வழங்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் பெருமளவு கழிவு உருவாக்குபவர்கள் மீது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள், தேவையான வண்ணக் குப்பைத்தொட்டிகளை (Bins) தாங்களே கொள்முதல் செய்து, கழிவுகளை தொடக்க நிலைகளிலேயே தரம் பிரித்து தங்கள் வளாகத்தின் நுழைவாயிலில் வைத்து, அவற்றை பெருநகர சென்னை மாநகராட்சி அல்லது பெருநகர சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட முகமை / நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள், தங்களால் உருவாக்கப்படும் உயிரியல் (மக்கும்) கழிவுகளை, தங்கள் வளாகத்திலேயே உரமாக்கல், உயிரி எரிவாயு தயாரித்தல் அல்லது விதிகளில் அங்கீகரிக்கப்பட்ட பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகள் மூலம் கட்டாயமாகச் செயலாக்க வேண்டும்.

உலர்கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்புப் பராமரிப்பு தேவைப்படும் கழிவுகளை, பெருநகர சென்னை மாநகராட்சி அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட முகமைக்கு ஒப்படைப்பதற்கான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

கழிவு உருவாக்கம், செயலாக்கம், போக்குவரத்து மற்றும் இறுதி அகற்றல் தொடர்பான பதிவுகளை முறையாகப் பராமரித்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதன் விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் https://swm.cpcb.gov.in/register என்ற இணைதயள இணைப்பிலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் https://gccservices.in/bulkwaste/register என்ற இணையதள இணைப்பிலும் சமர்ப்பிக்க வேண்டும்.

திருவொற்றியூர் மண்டலம் முதல் சோழிங்கநல்லூர் மண்டலம் வரை உள்ள 15 மண்டல அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் / தூய்மை இந்தியா இயக்க பரப்புரையாளர்கள், சுயாதீனப் பொறியாளர்கள் மூலம் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்வதற்கும் தேவையான தகவல்களைப் பதிவேற்றுவதற்கும் தேவையான உதவிகளை வழங்குவார்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நிலையான திடக்கழிவு மேலாண்மையையும் உறுதி செய்யும் வகையில், அனைத்து நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புச் சங்கங்கள் மேற்கண்ட அறிவுறுத்தல்களை கட்டாயமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், இணை ஆணையாளர் (சுகாதாரம்) திருமதி ஸ்ரேயா பி. சிங், இ.ஆ.ப., காணொலி வாயிலாக வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., (மத்தியம்). திரு.அதாப் ரசூல், இ.ஆ.ப., (தெற்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com