ஊர்களில் உள்ள சாதிப்பெயரை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கோப்புப்படம்
ஊர்களில் உள்ள சாதிப்பெயரை நீக்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் நிர்வாகம் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் உள்ள குடியிருப்புகள் தெருக்கள். சாலைகள், நீர்நிலைகள், இன்னபிறவை மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குதல்/மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவித்திருப்பதாவது,
1. தமிழ்நாடு அரசு. சாதி, மதம், பாலினம். செல்வம். அதிகாரம் போன்ற எந்தவொரு காரணத்தாலும் வேறுபாடு இல்லாத, சம வாய்ப்புகள் கொண்ட ஒரு நியாயமான மற்றும் முன்னேற்றமிக்க சமத்துவ சமூக அமைப்பை (A fair and Progressive Egalitarian Society) நோக்கி பல்வேறு திட்டங்கள், பணிகள், கொள்கை முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
2. தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக, சமூகத்தில் சமத்துவத்தை நிலைநிறுத்த பல மாற்றங்களை முன்னெடுத்த சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், தெருக்களிலிருந்து சாதிப் பெயர்களை நீக்க 1978 ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் நாளன்று அரசு ஆணை வெளியிட்டது. இவ்வாணையில், பாகுபாட்டைத் தவிர்த்து சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் உரிய தீர்மானங்களை நிறைவேற்றி சாதிப் பெயர்களை நீக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
3. அரசு, அனைத்து தரப்பு மக்களும் மதிப்போடும், சமமாகவும் நடத்தப்படும் போது மட்டுமே உண்மையான சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற அடிப்படையில் மேற்கொண்டுவரும் எண்ணற்ற முன்னோடி முயற்சிகளின் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 29.04.2025 அன்று பின்வரும் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்: ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது பழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
4. அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில், குடியிருப்புகள். தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், இன்னபிற போன்றவற்றிலுள்ள சாதிப் பெயர்களை நீக்குதல்/மறுபெயரிடுதல் தொடர்பாக 01.04.2025 மற்றும் 19.05.2025 ஆகிய நாட்களில் நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலும், சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுப்படுத்தும் வகையில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உட்கட்டமைப்புகள் போன்றவற்றிலுள்ள சாதிப் பெயர்களை நீக்குதல்/மறுபெயரிடுதல் தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோரிடமிருந்து மேலே படிக்கப்பட்ட மூன்று கடிதங்களில், மாதிரி வழிகாட்டு நெறிமுறைகள் பெறப்பட்டுள்ளன.
5. அரசு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக மேற்குறிப்பிடப்பட்ட மாதிரி வழிகாட்டு நெறிமுறைகளை கவனமான பரிசீலனைக்குப் பின்னர் ஏற்று, இவ்வாணையின் இணைப்புகளில் உள்ளவாறு குடியிருப்புகள், தெருக்கள். சாலைகள். நீர்நிலைகள் மற்றும் பிற பொது உட்கட்டமைப்புகள் போன்றவற்றில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குதல் அல்லது மறுபெயரிடுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறது.
6. இவ்வாணையை, இணைப்பில் நிர்ணயிக்கப் பட்டுள்ளவாறான காலவரம்பிற்குள் செயல்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர். நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






