

சென்னை,
வளைகுடா போர் காரணமாக, பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. இது குறித்து விவாதிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முக்கிய முடிகள் எடுக்கப்பட்டன.
அதன்பின்னர் அவர் கூறியதாவது:-
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது வளைகுடா போர் காரணமாக வெளிநாட்டு வியாபாரிகள் ஜவுளிகளை இறக்குமதி செய்வதில்லை.
மேலும் இந்த மாதம் ஆண்டுக் கணக்கு முடிவு என்பதாலும், புதிய துணி ஆர்டர்கள் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணங்களால், காடா ஜவுளித்துணி விற்பனை பாதிக்கப்பட்டு, துணிகள் தேக்கமடைய தொடங்கியுள்ளது. பஞ்சு விலை கிலோவுக்கு 7,000 ரூபாய் வரை உயர்ந்ததோடு, பாலியஸ்டர் மற்றும் ரேயான் விலை யும் 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்திய பருத்தி கழகமான சி.சி.ஐ. தனியாரிடம் பஞ்சை வழங்கியது.
சர்வதேச போர் சூழல் காரணமாக நுால் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதற்கு இணையாக துணி விலையை உயர்த்த முடியாமல் ஜவுளித்துறை முடங்கியுள்ளது. உற்பத்தி பொருட்கள் தேக்கமடைந்து உள்ளதால், தொழிலை தொடர முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், இன்று முதல் உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக பஞ்சுக்கான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கி, உள்நாட்டு தேவைக்கு போக, மீதமுள்ள நுாலை மட்டுமே ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.