குட்கா ஊழல் வழக்கு; மாதவராவ், சீனிவாசராவ் உள்பட 3 பேரின் சொத்துகள் முடக்கம்

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ், சீனிவாசராவ் உள்பட 3 பேரின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன.
குட்கா ஊழல் வழக்கு; மாதவராவ், சீனிவாசராவ் உள்பட 3 பேரின் சொத்துகள் முடக்கம்
Published on

தமிழகத்தில் தடையை மீறி குட்கா தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதால், சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த ஒரு குட்கா தயாரிப்பு ஆலையில் கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாதவராவின் ரகசிய டைரி அதிகாரிகள் கையில் சிக்கியது. அந்த டைரியில், தமிழகத்தில் தடையை மீறி குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு யார், யாருக்கு எவ்வளவு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது? என்ற விவரம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், கலால் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பெயர்களும் லஞ்ச பட்டியலில் இடம் பெற்று இருந்தன.

குட்கா விற்பனைக்காக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுக்கப்பட்டதும், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மொத்தம் ரூ.40 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

முதன் முதலில் இந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், உமாசங்கர் குப்தா உட்பட 4 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரது ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்பட 3 பேரின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் 3 பேரின் 174 அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com