

சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று தனியார் தொலைக்காட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர். அதில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவும் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அரங்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஹெச்.ராஜாவுக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சிகிச்சைக்குப் பின்னர் அவர் அபாயகட்டத்தை தாண்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஹெச்.ராஜாவின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவரின் அட்மின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
H.ராஜா அவர்கள் நேற்றைய தினம் NDTV விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எதிர்பாராதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக சென்னையிலுள்ள பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று இறைவன் அருளால் பூரண குணமடைந்து நலமோடு வீடு திரும்புவார். மேலும் H.ராஜா அவர்கள் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவரது அலைபேசி எண்ணிற்கு தேசபக்த உறவுகள் சில தினங்களுக்கு தயவுசெய்வு அழைக்கவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.