அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

நெல்லை, பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் போன்ற தென்மாவட்ட ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். அரையாண்டு விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக (டிசம்பர் 22-ந்தேதி) ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாகவும், ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு நடைபெற்றது.
முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தென்மாவட்டம் செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற ரெயில்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆர்.ஏ.சி.க்கு வந்துவிட்டது. பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் போன்ற தென்மாவட்ட ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதேபோல, டிசம்பர் 23-ந்தேதி சொந்த ஊர் செல்பவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்பதிவு செய்யலாம். டிசம்பர் 24-ந்தேதி சொந்த ஊர் செல்பவர்கள் நாளையும் (சனிக்கிழமை), டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 26-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






