மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், பழனி பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு உயரம் வளர்ச்சி தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயந்தி, துணை செயலாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், உயரம் வளர்ச்சி தடைபட்ட மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் என அறிவிக்க வேண்டும். அரசு திட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசு பஸ்களில் தாழ்தள வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போல் நின்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் ரோஜாப்பூவை ஏந்தி உயரம் தடைபட்டோருக்கான உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடினர்.

இதேபோல் பழனியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் பழனி நகர செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா என்ற பகத்சிங், நகர பொருளாளர் அய்யனார், ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

முன்னதாக சங்கத்தினர் புதுதாராபுரம் சாலையோரத்தில் கைகோர்த்தபடி நின்று தங்கள் கோரிக்கை குறித்த பதாகைகளை கையில் ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com