நலத்திட்டங்கள் பெற அலைக்கழிப்பு; தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

நலத்திட்டங்களை பெற அலைக்கழிப்பு செய்வதாக கூறி தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
நலத்திட்டங்கள் பெற அலைக்கழிப்பு; தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
Published on

நலத்திட்டங்களை பெற அலைக்கழிப்பு செய்வதாக கூறி தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அரசுத்துறை அலுவலகங்களில் நலத்திட்டங்கள் தொடர்பாக விண்ணப்பிக்க செல்லும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பு செய்வதாகவும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகளை உதாசீனம் செய்வதாகவும், அரசு மருத்துவமனைகளில் முறையாக சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். கம்பம் வட்டார முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் புகாரி மஸ்தான், செயலாளர் காமேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது.

கலெக்டரிடம் மனு

இதையடுத்து போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

அந்த மனுக்களில், "தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பெயரளவில் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லும் மாற்றுத்திறனாளிகளிடம் தற்காலிக ஊழியர்கள் பணம் கேட்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான தனி சிகிச்சை வார்டு ஏற்படுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசு பஸ்களில் இலவச பயண அட்டை மூலம் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளை போக்குவரத்து கழக பணியாளர்கள் சிலர் அவமரியாதையாக நடத்துகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com