தொழிலாளி உடல் 6 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

மர்மமான முறையில் இறந்த கூலி தொழிலாளியின் உடல் 6 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொழிலாளி உடல் 6 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு
Published on

தண்டராம்பட்டு

மர்மமான முறையில் இறந்த கூலி தொழிலாளியின் உடல் 6 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொழிலாளி மர்மச்சாவு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கோதி (வயது 55). இவர், பக்கத்து கிராமமான இளையாங்கண்ணி கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 24-ந்தேதி வேலைக்கு சென்றவர் மலையடிவாரத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

இதுதொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரில், சங்கோதி கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் தொடர்புடைய 3 பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் இறந்தவரின் உடலை வாங்காமல் கலெக்டர் அலுவலகம் முன்பும், சங்கோதி வீட்டு முன்பும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மருத்துவமனையில் பணிபுரியும் அரசு டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதனை வீடியோ பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உடல் ஒப்படைப்பு

அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சங்கோதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து 6 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் பெருங்குளத்தூர் கிராம மயானத்தில் சங்கோதியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து எரித்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com