

சென்னை,
சென்னை பாரிமுனை முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமுடன் இருக்கும் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டி சமூக பாதுகாப்புத் துறை குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைக்கு முத்தமிழ்செல்வன் என்று பெயர் சூட்டி, தொடர் பாதுகாப்புக்காக சமூல நலத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா முன்னிலையில், சமூக பாதுகாப்பு துறை குழந்தைகள் நல குழுவிடம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
முத்தியால்பேட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இருந்து கடந்த 14-ந்தேதி மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி மற்றும் போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
கிருமிகளால் நோய் தொற்று ஏற்பட்டிருந்த 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட அக்குழந்தைக்கு தலைமை டாக்டர் கணேஷ் தலைமையில், டாக்டர்கள், செவிலியர்கள் தேவையான தடுப்பூசி போட்டு, தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தாய்ப்பால் வங்கி மூலமாக அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்டது.
சிறப்பான சிகிச்சை அளித்ததன் காரணமாக குறைவான எடை கொண்ட அந்த குழந்தை தற்போது 2 கிலோ எடையுடன் நலமாக இருக்கிறது.
இந்த குழந்தையை கண்டெடுத்த போலீசாருக்கும், ஆம்புலன்சு டிரைவருக்கும், சிறப்பான சிகிச்சை அளித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், குழந்தைகள் நல துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.