

உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் ஒன்றியம் சிக்கத்தம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டம்பட்டி ஓடையில் உள்ள மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக, உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியது பெருமாள்பாளையம் குரும்பர் தெருவை சேர்ந்த செல்வத்தின் மகன் முருகானந்தம்(வயது 21) என்பது தெரியவந்தது. பால் வியாபாரம் செய்து வந்த அவர், நேற்று மாலை பால் கறவை முடித்து வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரை தேடினர். இந்நிலையில் அவர் பிணமாக தொங்கியது தெரியவந்தது. முருகானந்தம் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.