

சென்னை,
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
இருள் விலகி ஒளி பிறக்கும் உன்னதமான, மங்கலகரமான தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழகச் சொந்தங்களுக்கும். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதி வீழ்ந்து, அறம் வென்ற நன்னாளாகவும்: அஞ்ஞான இருள் அகன்று. மெய்ஞான ஒளி வீசும் திருநாளாகவும் விளங்குவது நமது தீபத் திருநாள். அதிகாலை மங்கல நீராடல், புத்தாடை அணிதல், மகிழ்ச்சி பொங்கும் பட்டாசு முழக்கங்கள், இல்லந்தோறும் ஏற்றப்படும் தீபங்களின் பிரகாசம், இனிப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் உறவுகளின் பாசம் என நமது பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாசாரப் பெருமையைப் பறைசாற்றும் பெருவிழாவாக இத்திருநாள் மிளிர்கிறது.
இன்று நமது பாரதத் தாய், உலக அரங்கில் தலைநிமிர்ந்து நடைபோடும் ஒரு பொற்காலத்தை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மையான. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், நமது தேசம் வளர்ச்சியடைந்த பாரதம் (Viksit Bharat) என்ற இமாலய இலக்கை நோக்கி வீறுநடை போட்டு முன்னேறி வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியையும். தமிழர்களின் ஆன்மீக மரபையும் பாரதம் முழுமைக்கும் கொண்டு சேர்த்த அவரது பண்பாட்டுச் சேவை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது.
பாரதத்தின் இத்தகைய அபரிமிதமான வளர்ச்சியையும் செல்வாக்கையும் பொறுத்துக்கொள்ள முடியாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சதி சக்திகள், ஜனநாயகத்தின் போர்வையில் செயற்கையான போராட்டங்களைத் தூண்டி தேசத்தின் அமைதியைச் சீர்குலைக்கவும். மறைமுக ஆட்சி மாற்றத்தை (Regime Change) ஏற்படுத்தவும் துடிக்கின்றன.
அநீதியின் இருள் எவ்வளவு அடர்ந்திருந்தாலும் ஒரு சிறு அகல் விளக்கின் சுடருக்கு முன் அது சுக்குநூறாகிவிடும் என்பதைப் போல, தேசத்தின் அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் நயவஞ்சக சக்திகளின் சதித் திட்டங்கள் 140 கோடி மக்கள் சக்தியின் முன் சுட்டெரிக்கப்படும்! இந்தத் தீபத் திருநாளில் அந்த விழிப்புணர்வோடு, உள்ளூர் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுப்போம்' (Vocal for Local) என்ற பிரதமரின் சிந்தனையை ஏந்தி, நம் தமிழ் மண்ணின் பாரம்பரியப் பட்டாசு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை ஆதரித்து, அவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சித் தீபங்களை ஏற்றுவோம்.
அறம் வெல்லட்டும்! அசுர சக்திகள் வீழட்டும்! பாரதத்தின் பெருமை உலகெங்கும் ஒளிரட்டும்! அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.