இறைநம்பிக்கையைப் போற்றும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள் - திருமாவளவன்


இறைநம்பிக்கையைப் போற்றும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள் - திருமாவளவன்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 Jun 2025 11:01 AM IST (Updated: 7 Jun 2025 1:09 PM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருமாவளவன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பக்ரீத் பண்டிகை என அழைக்கப்படும் ஈகைத்திருநாளில் (7.6.2025) இசுலாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நபிகள் நாயகத்துக்கும் முன்னோடிகளாக விளங்கிய நபிகளுள் ஒருவர் இப்ராஹிம் நபி ஆவார். அவர் தனது இறை நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு நெருக்கடிக்கு ஆளானார். அப்போது, தன்னுடைய அன்பு மைந்தனையும் இறைவனுக்காகப் பலியிடவும் துணிந்தாரென்றும், அப்போது இறைவனே தலையிட்டு அதனைத் தடுத்து, மகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியைப் பலியிட்டால் போதுமென்று அறிவுறுத்தியதாகவும் உலகளாவிய அளவில் இசுலாமியர்களால் நம்பப்படுகிறது. தனது மகனையே பலியிடத் துணிந்த இப்ராஹிம் நபியின் ஈகத்தை நினைவுகூர்ந்து, ஆட்டுக்குட்டிகளைப் பலியிடும் இந்தப் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்கள் ஏழை எளியோருக்கு உதவிகளைச் செய்வதோடு மட்டுமின்றி, நெருக்கடியான சூழல்களில் எத்தகைய ஈகத்தையும் செய்வதற்கு முன் வரவேண்டுமென்பதே இப்பண்டிகையின் முதன்மையான நோக்கம் என்பதை அறியமுடிகிறது.

ஈகையும் ஈகமும் மனித குலத்துக்கான இஸ்லாமிய வழிகாட்டுதல்களில் முதன்மையானவையாகும். இவற்றைப் பின்பற்றுவதோடு போற்றிக் கொண்டாடும் இஸ்லாமியர் யாவருக்கும் விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு; இசுலாமியர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு எதிராக இந்திய மண்ணில் திட்டமிட்டு விதைக்கப்படும் வெறுப்பு அரசியலை வீழ்த்திடவும்;

சனநாயகம், சகோதரத்துவம் சமூகநல்லிணக்கம் மற்றும் மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாத்திடவும், உறுதியேற்போமென சனநாயக சக்திகள் யாவருக்கும் இந்நாளில் அறைகூவல் விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story