ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை

ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை
Published on

தமிழ்நாட்டுக்கு தினமும் வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை அவர்கள் ஊடுருவி விட்டார்கள்.

பெரிய நிறுவனம் என்றாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அங்கிங்கெனாதபடி எங்கும் வேலை செய்கிறார்கள்.

ஒரு சிறு டீக்கடையை எடுத்துக் கொண்டாலும் கல்லாவில் இருப்பவரைத் தவிர, பலகாரங்கள் போடுவது, டீப்போடுவது,கிளாசுகளை கழுவுவதுவரை அவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கடும் உழைப்பாளிகள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையாக உழைக்கத் தெரிந்த நம்மவர்கள் என்ன ஆனார்கள்?

இலவசங்களால் கொஞ்சம் வயிற்றில் பசியாறிப் போவதால், சோம்பேறி ஆனார்கள். விளைவு நாம் செய்யவேண்டிய வேலைகளை, வடமாநிலத்தார் வந்து செய்கிறார்கள்.

கல்லாவை நம்மிடம் அவர்கள் கைப்பற்றாமல் இருந்தால், சரி.

தொல்லைகள்

அதேநேரம் வடமாநில தொழிலாளர்களின் அதிக வரவால் நமக்கு பல்வேறு வேலைகள் நடந்தாலும் தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

எடுத்துக்காட்டாக சொல்வது என்றால், ரெயில் பயணங்களில் அவர்களின் செயல்கள் நம்மை எரிச்சல் அடைய செய்கின்றன. பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது, வகுப்பு மாறி பயணம் செய்வது, சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் புகுந்து பயணம் செய்வது, பாக்குகளை வாயில் போட்டு குதப்பி கண்ட, கண்ட இடங்களில் உமிழ்வது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோதச் செயல்களை அச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும்கருத்துகள் வருமாறு:-

சட்டப்படி நடவடிக்கை

தர்மபுரி மாவட்ட ரெயில் பயணிகள் மற்றும் சமூக நல சங்க செயலாளர் மதியழகன்:-

வடமாநிலங்களில் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் அதற்குரிய விதிமுறைகள், கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிப்பதில்லை. இது தொடர்பாக அவர்களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதலும் வழங்கப்படுவதில்லை. தமிழகத்திற்கு வாழ்வாதாரத்தை தேடி வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த வழியாக செல்லும் ரெயில்களில் ஏறி விடுகிறார்கள். அது முன்பதிவு செய்த பெட்டியா? அதில் ஏறி பயணம் செய்வது சரியா? என்பது குறித்து எல்லாம் அவர்கள் யோசிப்பது இல்லை. இவ்வாறு செல்வது விதிமுறை மீறல் என்பது குறித்து அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரெயில்களில் இவ்வாறு விதிகளை மீறும் பயணிகள் மீது ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் படிப்படியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

தென்னக ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஜெ.என்.ஜெகநாதன்:-

ரெயில் பயணம் பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் இருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு எதிராக, ரெயில்களில் நெடுந்தூரப் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ள பெட்டிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அத்து மீறி புகுந்து பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்துவது தவறான செயல். தமிழ்நாட்டிலும் இத்தகைய சம்பவங்கள் தற்போது நடைபெற தொடங்கியுள்ளன. தொடக்க நிலையிலே இதை தடுக்க ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் முன்பதிவு செய்து ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் செய்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும். இதை மீறி விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது போலீசாரின் உதவியுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இத்தகைய விதிமீறல்கள் நிச்சயமாக கட்டுப்படுத்தப்படும். இது தொடர்பாக தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு தென்னக ரெயில்வே ஆலோசனை எடுத்துச் சென்று தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்.

பெண் பயணிகள் அச்சம்

பாலக்கோட்டையைச் சேர்ந்த மல்லிகா:-

ரெயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகளில் அத்து மீறி ஏறி படுக்கை வசதி கொண்ட சீட்டில் அமர்ந்திருக்கும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், முன்பதிவு செய்துள்ளோம் எனக்கூறி எழுந்திருக்கச் சொன்னால் கேட்பதில்லை. நாம் பேசும் மொழி அவர்களுக்கு புரிவதில்லை. இதனால் பிரச்சினை ஏற்படுகிறது. இவ்வாறு முன்பதிவு செய்த பெட்டிகளில் திடீரென பலர் விதிகளை மீறி ஏறி பயணிக்கும் போது முன்பதிவு செய்த பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. குறிப்பாக பெண் பயணிகள் அச்சம் அடைகிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com