பொன்னேரியில் சிவனும் பெருமாளும் சந்திக்கும் 'ஹரிஹர' நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

பொன்னேரியில் சிவனும் பெருமாளும் சந்திக்கும் ‘ஹரிஹர’ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொன்னேரியில் சிவனும் பெருமாளும் சந்திக்கும் 'ஹரிஹர' நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி திருவாயர்பாடி கிராமத்தில் ஸ்ரீ ஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆகம விதிகளின்படி சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து ஹரிகிருஷ்ண பெருமாள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று காலை வரையில் ஹரிகிருஷ்ண பெருமாளும், கும்மினிமங்கலம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் நேருக்கு நேர் சந்திக்கும் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பொன்னேரியில் அகத்திய முனிவரும், பரத்வாஜ் முனிவரும் சிவனையும் பெருமானையும் சந்திக்க வேண்டும் என்று ஆரணி ஆற்றுக் கரையில் இருவரும் தவம் இருந்தனர். அப்போது சிவபெருமானும், ஹரிகிருஷ்ண பெருமாளும் காட்சியளித்த நாளில் ஆண்டுதோறும் சந்திப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை காண திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனால் பொன்னேரி பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது. இந்தியாவில் எங்கும் நடைபெறாத இந்த சந்திப்பு நிகழ்ச்சி பொன்னேரியில் நடந்து வருவது தனி சிறப்பு ஆகும்.

சிவன், பெருமாள் ஒரே இடத்தில் சந்திக்கும் ஹரிஹர நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தது சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com