”அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த பொதுமக்கள் மீது வன்முறையில் இறங்கிவிட்டதா திமுக?” - ஆதவ் அர்ஜுனா

பாதுகாப்பு கொடுக்காமல் மறைமுக மிரட்டலில் ஈடுபட்டவர்கள், இப்போது நேரடி வன்முறையில் இறங்கிவிட்டார்கள் என ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டி உள்ளார்.
 ”அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த பொதுமக்கள் மீது வன்முறையில் இறங்கிவிட்டதா திமுக?” - ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நமது கழகத் தலைவர் கொளத்தூர் பகுதிக்குப் பிரசாரத்திற்குச் சென்றபோது சென்னை மாநகர காவல்துறையின் ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லாததால் முறைப்படுத்துதல் போன்ற பணி முற்றிலும் முடங்கியது. இதனால், மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானதைத் தொடர்ந்து கழகத் தலைவர் பிரசாரத்தைப் பாதியிலேயே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.

நேற்று, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடந்தபோது, திமுக-வால் ஏவப்பட்ட குண்டர்கள் பாட்டில்களை உடைத்து பெண்கள் மீது வீசி அச்சுறுத்தும் ரவுடியிச செயல்களில் ஈடுபட்டார்கள்.

பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இதுபோன்ற ரவுடியிச அச்சுறுத்தல்கள் நடைபெறும் வரை காவல்துறை வேடிக்கை பார்த்ததா?

காவல்துறை அதிகாரிகள் இருவரைக் கைது செய்த நிலையில், அவர்கள் எதற்காக இதனைச் செய்தார்கள்? அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் யார்? போன்ற காரணங்களுடன் நேர்மையாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

"தவெக கூட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் ஒவ்வொரு நிமிஷமும் பதற்றத்தோடு இருக்க வேண்டும். தவெக-வை ஆதரிப்பவர்களுக்கு இதுதான் எங்கள் செய்தி" என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த பொதுமக்கள் மீது வன்முறையில் இறங்கிவிட்டதா திமுக?

தமிழக வெற்றிக் கழக பிரசாரத்திற்கு எதிராகத் தொடர் அடாவடி போக்குகளில் ஈடுபட்டுவரும் சமூகவிரோத கும்பல் மீது மதிப்பிற்குரிய தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கைகளை எடுத்து, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொளத்தூரில் கழகத் தலைவருக்கு மக்கள் கொடுத்த எழுச்சியான வரவேற்பைப் பார்த்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அடைந்த பயமே, வில்லிவாக்கத்தில் இவ்வாறு எதிரொலித்துள்ளது. முதலில், நமக்கு பாதுகாப்பு கொடுக்காமல் மறைமுக மிரட்டலில் ஈடுபட்டவர்கள், இப்போது நேரடி வன்முறையில் இறங்கிவிட்டார்கள். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக பெண்களும், பொதுமக்களும் அராஜக திமுக ஆட்சிக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com